மறைந்தார் விஜயகாந்த்; நெல்லையில் மொட்டையடித்து துயரத்தை வெளிப்படுத்திய தொண்டர்கள்! - vijayakanth news in tamil
Published : Dec 29, 2023, 9:05 PM IST
திருநெல்வேலி: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், நேற்று (டிச.28) உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். அவரது இறப்பு ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சென்னை தீவுத்திடலில் இன்று (டிச.29) விஜயகாந்த் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் இன்று (டிச.29) பிற்பகல் 3 மணியளவில் தீவுத்திடலில் இருந்து புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வந்தடைந்தது. தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கானது நடைபெற்றது.
அவரின் முகத்தை இறுதியாகக் காண்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பலர், அவரது மறைவை தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். பலர் மொட்டை அடித்து தங்கள் துயரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த விஜயகாந்தின் தொண்டர்கள் குமார், முருகன், வேல்முருகன், தக்காளி முருகன், நடராஜபாண்டியன் உள்பட 6 பேர், விஜயகாந்தின் உருவப் படத்திற்கு முன் அமர்ந்து, மொட்டையடித்து தங்களது துயரத்தை வெளிப்படுத்தினர். இதில் தேமுதிக கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.