விஜய் மக்கள் இயக்கத்தினர் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்..! புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்! - vijay fans in Pudukkottai
Published : Nov 12, 2023, 10:29 AM IST
புதுக்கோட்டை: தீபாவளி பண்டிகை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு குதுகலம் தொற்றிக்கொள்ளும். தீபாவளி பண்டிகையில் பட்டாசுகளும், புத்தாடைகளும் நம் மனதை மகிழ்விக்கும். அந்த வகையில், புதுக்கோட்டையில் செயல்படும் பார்வையற்றோர் அரசுப் பள்ளி மாணவர்களை குதூகலப்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.
இதில், விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவரும், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளருமான பர்வேஷ் உள்ளிட்டோர், பார்வையற்ற பள்ளி மாணவர்களுடன் மத்தாப்பு கொளுத்தி, பட்டாசு வெடித்தும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். பின்னர், மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாணவ, மாணவிகளுடன் கம்பி மத்தாப்பு, புஸ்வானம் மற்றும் வெடிகளை வெடித்தனர். இதனால், மாணவர்களும் உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடினர்.
அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி, தீபாவளி வாழ்த்து கூறப்பட்டது. இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி தங்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவருக்கு மாணவ, மாணவியர்கள் தீபாவளி வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்படப் பலர் கலந்து கொண்டனர். விஜய் ரசிகர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.