‘லியோ’ திரைப்படம் வெற்றி பெற திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் ரசிகர்கள்! - லியோ படம்
Published : Oct 7, 2023, 11:01 PM IST
வேலூர்:குடியாத்தம் அடுத்த தாட்டிமானபல்லி கிராமத்தைச் சேர்ந்த டைலர் வேலை செய்பவர் ஏழுமலை. இவரும் ராமாலை கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இரண்டு விஜய் ரசிகர்களும் வருகின்ற 19ஆம் தேதி வெளிவர இருக்கும் விஜய்யின் லியோ திரைப்படம் வெற்றி பெற 150 கி.மீ., தொலைவில் உள்ள திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர்.
முன்னதாக தாட்டிமானபல்லி கிராமத்தில் சாலை ஓரம் உள்ள புத்து மாரியம்மன் கோயிலில் விஜய்யின் உருவப் படத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பின்னர், அங்கிருந்து பாதயாத்திரை செல்லும் இரண்டு ரசிகர்களையும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் C.M.செல்வம் விஜயன், விவேக் உள்ளிட்ட அனைவரும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
பாதயாத்திரை செல்லும்போது டைலர் வேலை செய்யும் ஏழுமலையின் இரண்டு பெண் குழந்தைகள் தந்தையை பார்த்து பத்திரமாக சென்று வரும்படி வழி அனுப்பி வைத்தனர். விஜய்யின் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற பாதயாத்திரை மேற்கொண்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் உள்ள ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.