திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.. தடுப்பை உடைத்து தரிசனத்திற்கு சென்ற பரபரப்பு வீடியோ! - கோயில் கேட்டை உடைத்த பக்தர்கள்
தூத்துக்குடி:அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூசம், விசாகம், ஆவணி, மாசித் திருவிழா போன்ற திருவிழா நேரங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக வேல் குத்தி, காவடி எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருவார்கள்.
மேலும், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.100 கட்டணம் தரிசனமும், பொது தரிசனமும் நடைமுறையிலிருந்து வருகிறது. இந்த தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் சண்முக விலாஸ் மண்டபம் முன்பு நின்று தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் சண்முக விலாஸ் மண்டபம் முன்பு தடுப்பு கேட் வைக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நேற்றைய முன்தினம் (மே 31) இரவு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் 100 ரூபாய் கட்டண தரிசனம் நிறுத்தப்பட்டதாலும், பொது தரிசனத்தில் அதிக அளவில் பக்தர்கள் தரிசனம் செய்யக் காத்திருந்ததாலும், சண்முக மண்டபத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்யப் பாதுகாப்புப் பணியிலிருந்த கோயில் காவலாளியிடம் கேட்டுள்ளனர்.
ஆனால், காவலாளிகள் அனுமதிக்க மறுத்ததால், கேட்டை தூக்கி எறிந்து சண்முக விலாஸ் மண்டபத்தில் நின்று சுவாமியை வழிபாடு செய்து விட்டுச் சென்றனர். இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்குடம் எடுத்து வந்து பக்தர்களை உள்ளே அனுமதிக்காததால், பக்தர்கள் கோயில் வெளிப் பிரகாரத்திலேயே பாலை ஊற்றிச் சென்ற சம்பவம் அரங்கேறியது.