குறைந்த விலை தான் கேளுங்கப்பா..! உரிமை கோராத 362 பைக்குகளை ஏலம் விட்டம் போலீஸ்! - நேதாஜி விளையாட்டு மைதானம்
வேலூர்:வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களை பொது ஏலம் விடும் நிகழ்வு நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில், வாகன மதிப்பீட்டாளர்கள் மூலம் அனைத்து வாகனங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் ஆரம்ப விலையில் இருந்து ஏலத்தொகை கோரப்பட்டது. இந்த வாகனங்களை ஏலம் எடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேதாஜி விளையாட்டு மைதானம் முன்பு குவிந்தனர். மேலும், நேரம் செல்ல, செல்ல அளவுக்கு அதிகமான கூட்டம் திரண்டது.
இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் எடுக்க வந்த பொதுமக்கள் ரூ.100 நுழைவு கட்டணம் செலுத்திய பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நுழைவு கட்டணம் செலுத்தி டோக்கன் பெறுவதற்காக இளைஞர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். இதில் 362-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ ஆகியவை காவல்துறை உதவி கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் ஏலம் விடப்பட்டது. இதில், பொது மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு வாகனங்களை ஏலம் எடுத்து சென்றனர்.