வேலூர் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயில் பிரதோஷம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்! - நந்தி
Published : Oct 27, 2023, 7:58 AM IST
வேலூர்: வேலூர் கோட்டையிலுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயிலில் நேற்று (அக்.26) பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், மாவுப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும், அருகம்புல், வில்வ இலைகளைக் கொண்டு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகாதீபாராதனைகளும் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் சச்சிதானந்த சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் “அரோகரா அரோகரா” என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். மேலும், பிரதோஷத்தையொட்டி கோட்டைக்குள் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலர் கோட்டையில் உள்ள பூங்காவில் அமர்ந்து மாலையில் பொழுது போக்கினர். ஏராளமான பக்தர்கள் வருகையால் கோயில் வளாகம் மற்றும் கோட்டை பூங்கா சற்று பரபரப்பாக காணப்பட்டது. இதனை ஒட்டி ஏராளமான போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.