வீடியோ: கச்சத்தீவு திருவிழாவுக்கு ஆர்வத்துடன் புறப்படும் பக்தர்கள்
இந்தியா-இலங்கை எல்லையில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள், மீனவர்கள் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள 2,408 பேர் இன்று (மார்ச். 3) புறப்பட்டு சென்றுள்ளனர்.
2020 மற்றும் 2021ஆம் ஆண்டில் கரோனா ஊரடங்கு காரணமாக கச்சத்தீவு திருவிழா நடைபெறவில்லை. அதன்பின் 2022ஆம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழா நடந்து வருகிறது. இருப்பினும், இந்தியாவில் இருந்து குறைந்த பக்தர்களே கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இயல்புநிலை திரும்பியதால், இந்தியாவில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 12 நாட்டு படகுகள் மூலம் 1,960 ஆண்களும், 379 பெண்களும், 69 சிறுவர்களும் உள்பட மொத்தம் 2,408 பேர் புறப்பட்டு செல்கின்றனர்.
இந்த திருவிழாவானது இன்று (மார்ச்.3) மாலை ஐந்து மணிக்கு கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றுடன் தொடங்குகிறது. அதன்பிறகு சிலுவை பாதை நடைபெறும் நாளை (மார்ச்.4) காலை தேர் பவனி உடன் கச்சத்தீவு திருவிழா நிறைவடையும். இதுவரையும் கச்சத்தீவை நோக்கி ஐந்து விசைப்படகுகள் புறப்பட்டுள்ளன.
இந்தக் கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள கர்நாடாகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்துள்ளனர். அதேபோல இந்தியா-இலங்கையின் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். பெரும்பாலும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஷ்வரத்தில் இருந்து படகுகள் புறப்பட்டு செல்கின்றன. இந்த பணிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதிகாலை முதலே படகுகள் செல்லத்தொடங்கிவிட்டன.