காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் துவக்கம்! - temple flag hoisting
காஞ்சிபுரம்:காஞ்சியில் சர்வதேச மிகவும் பிரசித்தி பெற்றது அத்திவரதர் கோயில். மேலும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயிலில், வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை, கோயிலின் கருவறையிலிருந்து, உற்சவரான வரதராஜ பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியுடன் மலையிலிருந்து இறங்கி வந்து கொடி மரத்தின் அருகே பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
கண்ணாடி அறையிலிருந்து கருட உருவம் பொறித்த கொடி பல்லக்கில் கொண்டுவரப்பட்டு, பட்டாட்சியர்கள் கொடி மரத்திற்குப் பூஜை செய்து பின்பு கொடி மரத்தில் ஏற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அலங்கார மண்டபத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காலை, மாலை என இரு வேளையும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் மாநகரின் வீதிகளில் வீதி உலா வந்து அருள்பாலிக்க உள்ளார்.
மேலும் பிரம்மோற்சவத்தின் முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவம் ஜூன் 2-ம் தேதியும், திருத்தேர் உற்சவம் ஜூன் 6-ம் தேதியும், ஜூன் மாதம் 8-ம் தேதி தீர்த்தவாரியும் 30-ம் தேதி வெட்டிவேர் சப்பர உற்சவமும் நடைபெற்று இவ்விழா நிறைவு பெறுகிறது. மிகப்பிரசித்தி பெற்ற இவ்விழாவில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்தாண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.