குடும்பத்துடன் காரில் வந்து ஆடு திருட்டு.. வைரல் வீடியோ! - Goat stealing CCTV footage
Published : Sep 10, 2023, 8:37 PM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கோணமேடு, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் சாலைகளில் உணவு தேடி அலைவதும், மாலை வீடுகளுக்கச் செல்வதும் வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை ஆசிரியர் நகர் முதல் குறுக்குத் தெருவில் ஆடுகள் சுற்றி திறந்து கொண்டு இருப்பதை பார்த்த காரில் குடும்பத்துடன் வந்த மர்ம நபர் ஒருவர், காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பிப்பதுபோல், ஆட்டுக்கு பிஸ்கட் கொடுத்து அடுத்தடுத்து 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அப்பகுதி குடியிருப்புவாசி ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக கார் நின்றதால் சந்தேகமடைந்து, ஆடுகளை திருடுவதைக் கண்டு தன்னுடைய செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.