தூரிகையான தமிழ் எழுத்துக்கள்.. கருணாநிதி உருவத்தை வரைந்த ஓவியர் செல்வம்! - ஓவிய ஆசிரியர்
கள்ளக்குறிச்சி:முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி சிறந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முக வித்தகராக திகழ்ந்தவர். முத்தமிழ் அறிஞராக போற்றப்பட்டவர். மேலும் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர், கட்சித் தலைவர் என எத்தனையோ பொறுப்புகளை வகித்தபோதிலும் அடிப்படையில் தாம் ஒரு எழுத்தாளர் என்று கூறிய கருணாநிதி தனது எழுத்துப் பணியை விட்டதே இல்லை.
கலைஞர் கருணாநிதியின் தமிழ் ஆர்வத்துக்கும், தமிழைக் கையாளத் தெரிந்த எழுத்து வண்மைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்ந்தவை என பராசக்தி, மனோகரா, பூம்புகார் போன்ற திரைப்பட வசனங்களைக் கேட்டு எழுச்சி கொள்ளதோர் எவருமிருக்க முடியாது. அந்த அளவுவிற்கு அவரின் தமிழ் அடுக்கு மொழியும், அவருடைய எழுத்தும் அமைந்து இருக்கும்.
சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் தான் செல்வம். இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து கூறும் விதமாகவும், அவருடைய எழுத்தாற்றலை போற்றும் விதமாகவும், கலைஞரின் பிறந்தநாள் பரிசாக முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டியும் தூரிகைகள் ஏதும் பயன்படுத்தாமல் தமிழ் உயிர் எழுத்துக்களின் வடிவங்களைத் தூரிகைகளாகக் கொண்டு நீர் வண்ணத்தில் எழுத்துக்களின் வடிவங்களை தொட்டு கலைஞரின் உருவத்தை பத்து நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்து அசத்தி உள்ளார்.