கோவையில் இரு இடங்களில் பிடிக்கப்பட்ட மலைப்பாம்புகள்! - வனத்துறை
Published : Oct 21, 2023, 2:24 PM IST
கோயம்புத்தூர்:காரமடை வனச்சரகம் பில்லூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் ஏராளமான காட்டு யானைகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், வெள்ளியங்காடு அருகே உள்ள கண்டியூர் பகுதியில் சரவணன் என்பவரது தோட்டத்தில் மலைப்பாம்பு இருப்பதாக காரமடை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாம்புபிடி வீரரான மணி என்பவரை வனத்துறையினர் பாம்பு பிடிக்க அனுப்பி வைத்தனர். அந்த நபர் மலைப்பாம்பை பிடிக்க முயன்றபோது, திடீரென மணியின் கையை பாம்பு பிடித்ததால் அதிர்ச்சியடைந்த அவர், அங்கேயே அப்படியே அமர்ந்து கொண்டு தன்னை விடுவிக்க முயற்சி செய்ததாகவும், எனினும் அவரால் பாம்பிடமிருந்து மீள முடியாததால். அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பின் வாயிலிருந்து கையை விடுவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த பாம்பு பில்லூர் வனப்பகுதியில் விடப்பட்டது.
அதேபோல, கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் மான் குட்டியை விழுங்கி விட்டு நகர முடியாமல் இருந்த மலைப்பாம்பை, பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத் துறையினர் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
நேற்று அந்த பயிற்சி மையத்தின் வளாகத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இரையை விழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்துள்ளது. அப்பகுதியினர் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அப்போது அந்த பாம்பு, குட்டி மானை விழுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.