Chain Snatchers Arrest: சூப்பர் பைக்குகள் தான் குறி..! செயின் பறிப்புக்காக பைக்குகளை தூக்கிய கும்பல் கைது.. - Kodambakkam
சென்னை: செயின் மற்றும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிய இருவரை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் தனசேகர். இவர் புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனசேகர் பணியை முடித்து விட்டு வீட்டின் முன்பாக மூன்று லட்சம் மதிப்புள்ள தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் காலையில் பார்க்கும் போது இருசக்கர வாகனம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர், இது குறித்து கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் இரண்டு நபர்கள் குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டது தெரியவந்தது.
அவர்கள் ஒவ்வொன்றாக நோட்டமிட்டு உயர் ரக மற்றும் அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனத்தை குறிவைத்து திருடி செல்வது தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சியில் குற்றவாளியின் முகம் தெரியாத காரணத்தால் கோடம்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் வரை உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் மூலம் இரு சக்கர வாகணத்தை திருடியது பல்லாவரம் பகுதியை சேர்ந்த சூர்யா மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் தான் என தெரியவந்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில், செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடியதாக கூறினர்.
குறிப்பாக ஒரே வாகனத்தில் சென்று செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டால் போலீசாரிடம் எளிதாக சிக்கி கொள்வோம் என்பதால் உடனே அந்த வாகனத்தை இடைதரகர்கள் மூலமாக விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட சரவணன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களிடம் இருந்து இரண்டு உயர்ரக இருசக்கர வாகனங்கள் உட்பட நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.