பழங்குடியினர் தின கொண்டாட்டம் - பாரம்பரிய உடையுடன் நடனமாடிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!
நீலகிரி:மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், காட்டுநாயக்கர், பனியர் போன்ற 6 வீதமான சுமார் 31 ஆயிரம் பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று உலகப் பழங்குடியினர் தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மக்களால் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை உதகைக்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தோடர் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் முத்துநாடு மந்து கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள பழங்குடியினர் மக்களை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்ததுடன் தோடர் பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய உடையுடன் நடனமாடி அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட தோடர் பழங்குடியினர் மக்களின் பிரதிநிதியும், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், கூடலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கீர்த்தனா உட்பட ஏராளமான பழங்குடியினர்கள் பங்கேற்றனர். பழங்குடியினர் மக்களுடன் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நடனமாடியது பழங்குடியினர் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.