ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்... பரிசலில் சென்று உற்சாகம்! - சினி அருவி
Published : Oct 29, 2023, 4:33 PM IST
தருமபுரி:இன்று (அக். 29) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் ஒகேனக்கலில் குவிந்தது. அருவியை ரசித்தும், படகு பரிசலில் சென்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து உள்ளது ஒகேனக்கல் சுற்றுலா தளம்.
இங்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதனை கொண்டாட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தனர்.
இதனால் இன்று காலை முதலே ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் பயணிகளால் நிரம்பி வழிந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றுப்பகுதியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் இனிமையாக சுற்றுலாவை கொண்டாடினர்.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து தற்போது 5 ஆயிரம் கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.