ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்! - etvbharat tamil
தென்காசி:தென் மாவட்டங்களில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கக்கூடிய குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலகட்டம் ஆகும். இந்த காலகட்டங்களில் அருவிகளில் நீராடுவதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், குற்றாலத்தில் சீசன் துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்ட அணைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இரவு நேரங்களில் தண்ணீர் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரான நிலையில், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக கரையோர வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.