திருவண்ணாமலை மகா தீப ஜோதி: சுடர்விட்டு எரியும் ஜோதியை மலை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்..! - சுடர்விட்டு எரியும் ஜோதி
Published : Nov 27, 2023, 9:42 PM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீப திருவிழா நேற்று (நவ. 26) மாலை விமர்சையாக நடைபெற்றது.
அதில், விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக கோயிலில் நடனமாடியபடி வந்து, அலங்கார தீப மண்டபத்தில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து, சரியாக மாலை 6 மணிக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் சரியாக ஆறு மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில், பஞ்ச லோகத்தாலான கொப்பரையில் மகா தீபமானது ஏற்றப்பட்டது. அந்த வகையில், நேற்று மாலை ஏற்றப்பட்ட மகா தீப ஜோதி மறுநாள் கடந்தும் எரிந்து கொண்டிருந்தது. அதில் ஜோதிப்பிழம்பாக காட்சி அளித்த அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மலைமீது சுடர் விட்டு எரியும் ஜோதியை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.