கார்த்திகை தீபத் திருவிழா: அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகமும்.. ஆராதனையும்..!
Published : Nov 20, 2023, 3:13 PM IST
திருவண்ணாமலை:பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நான்காம் நாள் திருவிழாவான இன்று (நவ. 20) அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் உற்சவமான இன்று (நவ. 20) விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் நாக வாகனத்திலும் 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.
இதனைத் தொடர்ந்து விநாயகர் மற்றும் சந்திரசேகரனுக்கு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர் மற்றும் சந்திரசேகர் நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் உற்சவமான இன்று (நவ. 20) இரவு விநாயகர், முருகர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வெள்ளி காமதேனு கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 23ஆம் தேதி மகா தேரோட்டமும், 26ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளன.