கார்த்திகை தீபத் திருவிழா; திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்குடை ஊர்வலம்! - Annamalaiyar Temple Thirkudai Procession
Published : Nov 16, 2023, 2:07 PM IST
திருவண்ணாமலை:பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்கி தரும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை கோயில். இங்கு உள்ள புகழ் பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை (நவ.17) காலை, தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி, 26ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.
பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில், சுவாமிகளுக்கு மேல் கட்டப்படும் திருக்குடைகள் ஒவ்வொரு ஆண்டும், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த தனியார் சங்கத்தின் சார்பில், அண்ணாமலையார் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, 19வது வருடமாக ரூ.3 லட்சம் மதிப்பில் 10 திருக்குடைகள் தனியார் சங்கத்தின் சார்பில் வழங்கியுள்ளனர்.
அண்ணாமலையார் கோயிலில் இந்த திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, ஜோடிக்கப்பட்டு யானை, விநாயகர், முருகர், சிவன், பார்வதி வேடமணிந்து, செண்டை மேளம், நாதஸ்வரம் இசையுடன் நடனம் ஆடியபடி திருக்கோயிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, பின்னர் திருக்குடைகள் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.