அண்ணாமலையார் கோயிலில் மாசி மாத சனி மகா பிரதோஷ விழா! - Tiruvannamalai Annamalaiyar Temple
திருவண்ணாமலை:பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் விளங்குகிறது. இங்கு ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திக்கு, மாசி மாத சனி மகா பிரதோஷ விழா நேற்று (மார்ச்.4) வெகு விமர்சையாக நடைபெற்றது.
பௌர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம். இதில் சனி மகா பிரதோஷம் மிகவும் சிறப்புடையதாகும். மாசி மாத சனி மகா பிரதோஷ தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.
பிரதோஷ தினத்தின் போது, நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். சனி மகா பிரதோஷம் என்பது மிகவும் சிறப்புடையதாகவும். சனி மகா பிரதோஷத்தை கண்டால் ஓராண்டு பிரதோஷ தினத்தை வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம். நேற்று நடைபெற்ற மாசி மாத சனி மகா பிரதேஷத்தினை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.