துர்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கிய அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா! - Annamalaiyar Temple Festival
Published : Nov 15, 2023, 6:53 AM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்குவதாக திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கருதப்படுகிறது. இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17ஆம் தேதி கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி, நவம்பர் 26ஆம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் கோயிலின் கருவறையின் முன்பாக பரணி தீபமும், மாலை ஆறு மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா நேற்று (நவ.14), நகரின் காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் உள்ள ஊர் காவல் தெய்வமான துர்கை அம்மன் கோயிலில், துர்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காலத்தில் துர்கை அம்மன் காட்சியளித்தார்.
அதன்பின், தீபாராதனை நடைபெற்றது. பின்னர், துர்கை அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிடாரி அம்மன் மாட வீதி உலாவும் நடைபெற்றது.