திருவண்ணாமலை தேரோடும் வீதியில் புதிய சாலை.. தரத்தை சோதிக்க வெள்ளோட்டம்! - கார்த்திகை தீபம் தேதி
Published : Nov 16, 2023, 10:10 AM IST
திருவண்ணாமலை:பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலின் நான்கு மாட வீதியில் 15 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று, தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளது. குறிப்பாக, திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான 7ஆம் நாள் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் மரத் தேரில் எழுந்தருளி, மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
புதிதாக போடப்பட்ட கான்கிரீட் சிமெண்ட் சாலையின் தரத்தை உறுதி செய்யும் வகையில், நேற்று (நவ.16) முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், முருகர் தேரின் வடத்தைப் பிடித்து நான்கு மாட வீதியில் உலா வந்து, அண்ணாமலையாரை தரிசனம் செய்து வழிபட்டனர்.
மேலும், நேற்று இரவு விநாயகர் உற்சவம் நடைபெற்று, இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.