"அண்ணாமலையாருக்கு அரோகரா" - 7 ஆம் நாள் அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவில் விநாயகர் தேரோட்டம்! - today latest news
Published : Nov 23, 2023, 12:04 PM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படும் திருத்தலமாகவும் விளங்குவது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். இந்த புகழ் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதேபோல், இந்த ஆண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொங்கியது. இந்த நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ஆம் நாள் திருவிழாவான இன்று (நவ.23) விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து, விநாயகர் தேர் நான்கு மாட வீதியில் உலா வர, ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று கோஷம் எழுப்பியபடி, விநாயகர் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இன்று நடைபெறும் திருத்தேரோட்ட விழாவிற்கு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில், திருவண்ணாமலையில் 4 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.