திருவண்ணாமலை கோயில் இரண்டாம் நாள் தீபம்: ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம்! - திருவண்ணாமலை செய்திகள்
Published : Nov 27, 2023, 10:58 PM IST
திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பாக 4 மணிக்கு பரணி தீபமும், நேற்று (நவ. 26) மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. இந்த மகா தீப தரிசனத்தை காண சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தனர்.
14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொண்டு மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப தரிசனத்தை கண்டு அண்ணாமலையாரை தரிசித்தனர். இந்நிலையில், மலை உச்சியில் பஞ்ச லோகத்தாலான கொப்பரையில் நெய் நிரப்பப்பட்டு காடா துணிகள் பயன்படுத்தி இரண்டாம் நாள் மகா தீபமானது சரியாக 6 மணிக்கு ஏற்றப்பட்டது. மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப் பிழம்பாக காட்சி அளித்தார். இதனை அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.