திருப்பூரில் பயங்கர தீ... காதர்பேட்டையில் 50 கடைகள் எரிந்து நாசம்! - திருப்பூர் காதர் பேட்டை பனியன் மார்க்கெட்
திருப்பூர்:பனியன் தொழிலுக்கு பெயர் பெற்ற திருப்பூரில் காதர்பேட்டை பகுதி இரண்டாம் தர பனியன் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு புகழ் பெற்ற பகுதி ஆகும். இங்கு கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் வியாபாரிகள் வந்து பனியன் வாங்கிச் செல்கின்றனர். மேலும், ஆன்லைன் மூலமாகவும் வர்த்தகம் நடைபெறக் கூடிய சூழ்நிலையில், அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இதில் நஞ்சப்பா பள்ளி எதிரில் 50 கடைகள் சேர்ந்த பனியன் பஜார் உள்ளது. தற்காலிக ஷெட்டுகளில் 50 பனியன் கடைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில், நேற்று (ஜூன் 23) பனியன் பஜாரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு 9.30 மணியளவில் ஒரு கடையில் ஏற்பட்ட இந்த விபத்து வேகமாக அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது. இதனால் காதர்பேட்டையில் இருந்த கடைகள் அனைத்தும் பற்றி எரியத் தொடங்கின.
இந்த விபத்தில் கடைகளில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புலான பனியன்கள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே, தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 வாகனங்கள் மூலமாக தீயை அணக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.