அடுத்தடுத்த திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள்:வெளியான CCTV காட்சிகள்! - மொபைல் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கடை
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை கசமேடு பகுதியில் வசிப்பவர் ஸ்டெல்லா, சார்லஸ். இவர் அமெரிக்க நாட்டில் பணிபுரியும் தனது மகளைப் பார்ப்பதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கச் சென்றுள்ள நிலையில், நீண்ட நாட்களாக பூட்டி இருந்த வீட்டை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றனர்.
கடந்த 5 மாதங்களாக பூட்டி இருந்த வீட்டில் லைட் எரிவதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அமெரிக்காவில் இருக்கும் ஸ்டெல்லாவிற்கு வீட்டில் திருடு போனது குறித்து தகவல் அளித்துள்ளனர். இதனை எடுத்து ஸ்டெல்லாவின் இரண்டு பெண் பிள்ளைகள், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
மேலும் செவ்வாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பிரசாந்த் என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மொபைல் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்த நிலையில் வழக்கம்போல் இரவு 9 மணி அளவில் கடையைப் பூட்டு போட்டு சென்றுள்ளார். ஏற்கனவே ஸ்டெல்லா வீட்டில் திருடிய நபர்கள் மீண்டும் கடையின் பூட்டை உடைக்க முயன்ற போது அருகிலிருந்தவர்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் மொபைல் கடையில் பூட்டை உடைக்க மூன்று இளைஞர்கள் வருவதும், அவர்களில் ஒருவர் நோட்டமிடுவதற்காக அருகில் அமர்ந்திருக்க, துணியால் முகத்தை மூடி இருக்கும் இரண்டு இளைஞர்கள் கடையின் பூட்டை இரும்பு ராடு கொண்டு உடைத்துள்ளனர். அப்போது அருகிலிருந்தவர்கள் சத்தமிட்டதைக் கண்டு மூவரும் தப்பித்து ஓடும் சிசிடிவில் பதிவாகி உள்ளது. சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
குடியிருப்பு அதிகம் இருக்கும் பகுதியில் மர்ம இளைஞர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடி இருப்பதும் கடையை உடைக்க முற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.