தூத்துக்குடியில் கோலாகலமாக நடைபெற்ற சப்பர பவனி.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்! - Dussehra festival
Published : Oct 27, 2023, 10:36 AM IST
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோயில்களில் நவராத்திரியை முன்னிட்டு தசரா திருவிழா கடந்த 10 நாட்களாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அம்மன் கோயில்களில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது. அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதைத் தொடர்ந்து அம்மன் சப்பர பவனி, ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் முன்பு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர்.
பின்னர், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து உச்சி மாகாளியம்மன், சந்தன மாரியம்மன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன், மேலூர் பத்திரகாளி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் இருந்து சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் முன்னிலையில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். இந்த சப்பர பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.