2 மணிநேரம் காத்திருப்பு.. கோபமாக வெளியேறிய எம்எல்ஏ.. திருவள்ளூர் கலெக்டர் ஆபிஸில் நடந்தது என்ன? - Jagan Moorthy
Published : Jan 5, 2024, 11:01 AM IST
திருவள்ளூர்:புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி, திருவள்ளூர் அடுத்த எறையூர் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்திதரக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த தனது கட்சி பிரதிநிதிகளுடன், நேற்று மாலை மனு அளிப்பதற்காக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை சந்திக்க ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார்.
அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவக்குமார், எல்எல்ஏ ஜெகன் மூர்த்தியை சுமார் 2 மணி நேரமாக மாவட்ட ஆட்சியரை சந்திக்காவிடாமல், காக்க வைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு முன்பாக தனியார் தொழிற்சாலை நிர்வாகிகளை மாவட்ட ஆட்சியர் சந்தித்து பேசியதாகவும், அதனால் அதிருப்தியடைந்த ஜெகன் மூர்த்தி, தன் தொண்டர்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ஜெகன் மூர்த்தி வெளியேறும் சம்பவத்தைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர், கீழே இறங்கி வந்து ஜெகன் மூர்த்தியிடம் சமாதானம் செய்து அழைத்துச் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமியை ஆட்சியர் அவமதித்தாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.