"நாளைய மத்திய அமைச்சரே".. சபரிமலையில் வைரலாகும் திருமாவளவன் போஸ்டர்! - theni news
Published : Jan 6, 2024, 4:36 PM IST
கேரளா: ஏராளமான ஐயப்ப பக்தர்கள், மார்கழி மாதத்தில் ஐயப்பனுக்கு விரதம் மேற்கொண்டு, இருமுடி கட்டி மாலை அணிவித்து கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பதினெட்டாம்படி ஐயப்பனைக் காண வருகை தருகின்றனர். இந்த நிலையில், சபரிமலையில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புகைப்படத்துடன் உள்ள போஸ்டர் ஒன்றை கையில் வைத்தபடி வலம் வந்த வீடியோ, தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த போஸ்டரில், திருமாவளவன் புகைப்படத்துடன் "நாளைய மத்திய அமைச்சரே" என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல கடந்த ஆண்டு அஜித், விஜய் போன்ற சினிமா நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு, அவர்களது ரசிகர்கள் பேனருடன் சபரிமலைக்குச் சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகியது.
இந்த நிலையில், தற்போது அரசியல் கட்சித் தலைவர் ஒருவரது புகைப்படம் அடங்கிய பேனருடன், சபரிமலையில் சிறுமி வலம் வந்த வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருவது நெட்டிசன்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும் பேசு பொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.