இன்னைக்கு ஒரு புடி...திருச்செந்தூரில் சுடலை மாடசாமி கொடைவிழாவை ஒட்டி 1500 கிலோ கிடா கறி அன்னதானம்!
தூத்துக்குடி:திருச்செந்தூர் மேலத்தெருவில் உள்ள "ஸ்ரீ அருள்மிகு சுடலை மாடசாமி'' திருக்கோயில் கொடை விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்நிலையில், இந்த வருடம் கோயில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 18ம் தேதி கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (ஜூலை 24) சொரிமுத்தையனார் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. பின்னர், கோயில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று (ஜூலை 25) இரவு 12.30 மணிக்கு வண்ண மலர்களுடன் ஸ்ரீ சுடலை மாடசுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
இதில் பக்தர்கள் சுமார் 100 ஆடுகள் அன்னதானத்திற்கு நன்கொடையாக வழங்கினர். 2,500 கிலோ அரிசி சமைக்கப்பட்டு இன்று (ஜூலை 26) அதிகாலை முதல் பக்தர்களுக்கு 1500 கிலோ கிடா கறியுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக, நூற்றுக்கணக்கான வாழைத்தார்களை கோயில் முழுவதும் கட்டியிருந்தனர். இக்கோயில் நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.