திருச்செந்தூர் முருகன் கோயில் அக்டோபர் மாத உண்டியல் வசூல் ரூ.2.42 கோடி! - Thiruchendur Murugan Temple October bill
Published : Oct 27, 2023, 2:16 PM IST
தூத்துக்குடி:திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் வருமானம் ரூ.2.42 கோடி என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி, அக்டோபர் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை என்னும் பணியானது கோயில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.
கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக் குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், உண்டியலில் ரூ.2 கோடியே 42 லட்சத்து 33 ஆயிரத்து 243 ரொக்கமும், 1,370 கிராம் தங்கமும், 25 ஆயிரம் கிராம் வெள்ளியும், 261 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.