திருட வந்த வீட்டில் ஹாயாக பாதாம், பிஸ்தா சாப்பிட்ட திருடர்கள்: நடந்தது என்ன? - Tirupathur theft
திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் எல்லப்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ஐந்து சவரன் நகை மற்றும் 400 கிராம் வெள்ளி பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் பரந்தாமன் (55), இவரது மனைவி செல்வராணி (50). இவர்களது மகன் ராகுல், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
ராகுலின் மனைவி மேனகா பிரசவத்திற்காகத் தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில் பரந்தாமன் மற்றும் செல்வராணி ஆகியோர் மருமகளைப் பார்ப்பதற்காக நயனசெருவு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். இந்த சூழலைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த மர்ம கும்பல், பரந்தாமன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சவரன் நகை மற்றும் 400 கிராம் வெள்ளி பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், அங்கிருந்த பாதாம், பிஸ்தா போன்ற விலை உயர்ந்த உணவுப் பொருட்களை விட்டு வைக்க மனம் இல்லாத திருடர்கள் சோபாவில் ஆர அமர உட்கார்ந்து அதை மொத்தமாகச் சாப்பிட்டுச் சென்றுள்ளனர். மேலும் சில்லறைக் காசுகள் மீது விருப்பம் கொள்ளாத அந்த திருடர்கள், உண்டியலை உடைத்து நோட்டு காசுகளை மட்டும் எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளனர்.
வீடு திரும்பிய பரந்தாமன் இதனைக் கண்டு அதிர்ச்சியில் உரைந்த நிலையில் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:தீபாவளிக்கு தயாராகும் ஆவின் பலகாரங்கள்... அமைச்சர் தந்த தகவல்..