CCTV VIDEO: திருட வந்த இடத்தில் கடவுளை வணங்கி பயபக்தியுடன் திருடிய திருடன்! - காஞ்சிபுரம் மாவட்ட செய்தி
காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அடுத்த சிருமாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (32). இவர் சுங்குவார்சத்திரம் பஜாரில் வாலாஜாபாத் செல்லும் சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்று நடத்தி வருகிறார். ராஜ்குமார் நேற்று இரவு (ஜூன் 22) வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் வழக்கம் போல இன்று (ஜூன் 23) காலை கடைக்குச் சென்றுள்ளார். கடையின் கதவை ராஜ்குமார் திறக்க முயன்ற போது கதவின் பூட்டு ஏற்கனவே உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பதறியடித்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த ராஜ்குமார், கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஒரு லட்சத்து 8ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பேண்ட் சட்டை அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து, இரும்பு ஆயுதத்தின் மூலம் கல்லாப் பெட்டியை உடைத்து பணத்தை பார்த்தது அதிர்ச்சி அடைவதும், கல்லாப்பெட்டிக்கு பின்புறம் உள்ள கடவுள்களின் புகைப்படங்களைக் கண்டு பயபக்தியுடன் வணங்கி விட்டு பணத்தைத் திருடிச் செல்வதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளோடு ராஜ்குமார் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பணத்தை திருடிய குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணிக்கு நிகழ்ந்த சோகம்! முறையான சிகிச்சை அளிக்காததால் தாய், சேய் இருவரும் உயிரிழப்பு..!