தேனி கிராம சபை கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு! - Gram Sabha meeting
Published : Oct 2, 2023, 10:22 PM IST
தேனி: போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் இன்று (அக்.02) நடைபெற்றது. மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்தனர்.
பின்னர் மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கெப்புரெங்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நபர், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, கழிவு நீர் கால்வாய், விளையாட்டு மைதானம், நியாய விலை கடை போன்ற எந்த ஒரு வசதிகளும் ஊராட்சி மன்ற தலைவர் செய்து கொடுக்காமல் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், காந்தி புகைப்படத்திற்கு முன்பாக அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோஷம் எழுப்பி போராட்டம் செய்தார். இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.