நடிகர் விஜய் மாணவர்களை சந்திக்கும் விழாவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் வீடுகளுக்குச் சென்று அழைப்பு
மயிலாடுதுறை: தமிழ்நாட்டு அரசியலில் கால் பதிப்பதற்கான முன்னெடுப்புகளை நடிகர் விஜய் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக அண்மையில் உலக பட்டினி தினத்தன்று அனைத்து தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏழை மக்களுக்கு உணவு வழங்க, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று சிறப்பிடங்களைப் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில், சென்னை நீலாங்கரையில் வருகிற 17ஆம் தேதி நடைபெற உள்ள பாராட்டு விழாவில் நடிகர் விஜய் மாணவர்களை சந்தித்து பாராட்டு தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்க உள்ளார்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார் சட்டமன்றத் தொகுதிகளில், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களைப் பாராட்டும் விழாவில் பங்கேற்க விஜய் மக்கள் இயக்கத்தினர் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.
விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் குட்டி கோபி தலைமையில், அவ்வியக்க நிர்வாகிகள் மாணவர்களின் வீடுகளுக்கே தேடிச்சென்று பழத்தட்டுடன் அழைப்பிதழை வழங்கினர். ஒரு மாணவருடன் பெற்றோர் இருவர் உடன் செல்ல உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நீலாங்கரைக்குச் செல்ல மக்கள் இயக்க நிர்வாகிகள் பேருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.