தமிழ்நாடு

tamil nadu

பாலாறு பாழாவதை தடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ETV Bharat / videos

பாலாற்றில் செத்து மிதந்த மீன்கள்.. ஆம்பூரில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!

By

Published : Jun 20, 2023, 7:17 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் நேற்று முதல் (ஜூன் 19) கனமழை பெய்து வரும் நிலையில், பாலாற்றில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், அவ்வப்போது மழை நீரில் தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிக்காமல் நேரடியாக ஆற்றில் கலப்பதால் தோல் நோயால் அப்பகுதி மக்கள் அவதிப்படுவதாகக் கூறுகின்றனர். 

இவ்வாறு கழிவு நீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் வாடிக்கையாக மாறி உள்ளது. நேற்று பெய்த கனமழையால் மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு தரைப்பாலத்தின் கீழ் செல்லும் நீரானது, கருப்பு நிறத்தில் நிறம் மாறி துர்நாற்றத்துடன் செல்வதாகவும், ஆற்று நீரில் ஆயிரக்கணக்கான மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தோல் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலக்க விடப்படுவதே இதற்குக் காரணம் எனக் கூறி பாலாற்றைப் பாதுகாக்க வலியுறுத்தி, பாலாறு தரைப்பாலத்தின் மீது திடீரென அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் இதுகுறித்து அப்பகுதி விவசாயியான சரவணன் என்பவர் கூறுகையில், வாணியம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரைச் சுத்திகரிப்பு செய்யும் சுத்திகரிப்பு ஆலையில், கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக மழைக்காலங்களில் ஆற்றில் திறந்து விடப்படுவதாகவும், இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைந்து உள்ளதாகவும் கூறினார்.

மேலும், கால்நடைகள் கூட ஆற்று நீரைப் பருகுவதில்லை எனவும் தங்கள் பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பலரும் நோய்வாய் பட்டுள்ளதாகவும், பாலாறு தொடர்ந்து பாழாக்கப்பட்டு வருவதை அரசு தடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details