நியாய விலை கடையில் நியாயமற்ற சூழல்... தி.மு.க. எம்பியை முற்றுகையிட்டு பெண்கள் புகார்! - Ration shop in Dindigul
Published : Aug 22, 2023, 2:25 PM IST
திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டி அருகே காந்திநகர் காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் உள்ள நிலையில், இங்குள்ள நியாய விலைக் கடை மிகவும் பழுதடைந்து உடையும் தருவாயில் இருந்தது. இதனையடுத்து இந்த நியாய விலைக் கடை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் சீரமைக்கப்பட்ட புதிய நியாய விலை கடையை திண்டுக்கல் தி.மு.க எம்.பி வேலுச்சாமி திறந்து வைத்தார். அப்போது தி.மு.க எம்.பி வேலுச்சாமியை முற்றுகையிட்ட அப்பகுதி பொதுமக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி உள்ளிட்ட பொருட்கள் சரிவர போடுவதில்லை எனவும் எந்த பொருளும் தரமானதாக இருப்பது இல்லை எனவும் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் செய்வது அறியாது நின்ற தி.மு.க எம்.பி வேலுச்சாமி, "இனி பொருட்கள் அனைத்தையும் தரமானதாக போடச் சொல்வதாக" பொதுமக்களிடம் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் இரண்டு நாட்கள் மட்டும் நியாய விலைக் கடைகளில் பொருட்களை போட்டுவிட்டு, மீதமுள்ள பொருட்களை கடத்தி சென்று விடுகிறார்கள் என மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொது மக்களின் கேள்வி துளைகளால் மிரண்டு போன எம்.பி. வேலுச்சாமி, பொதுமக்களிடம் முறையாக பதில் கூற முடியாமல் நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்றார்.