சாலையில் வலிப்பு வந்து உயிருக்கு போராடிய இளைஞருக்கு முதலுதவி செய்த போலீசார்! - first aid
செங்கல்பட்டு:தாம்பரம் அடுத்த இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவர் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் நோக்கி சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது சதீஷுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கை, கால்கள் இழுத்துக்கொண்டு சாலையில் துடிதுடித்துள்ளார்.
இதனை கவனித்த அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்துச் சென்று அவரை தூக்கி தாங்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் சாவியை சதீஷின் கையில் கொடுத்து இறுக்கிப் பிடித்து முதலுதவி செய்தனர். பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகு சதீஷ் இயல்பு நிலைக்கு திரும்பி கண் விழித்து பார்த்தார்.
உடல் நிலை சீரானதும் தன்னை கவனித்து உதவி செய்த தனிப்பிரிவு காவலர் மற்றும் உளவுத்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் போக்குவரத்துக் காவலர்களுக்கு இரு கரம் கூப்பி சதீஷ் நன்றி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சதீஷ் தினக் கூலி வேலை செய்து வருவதாகவும், உறவினர் வீட்டுக்குச் செல்ல தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வந்த போது, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடல் நிலை பாதித்து மயங்கிய இளைஞருக்கு முதலுதவி செய்த காவலர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.