சொல்லுங்க சொல்லுங்க அப்றம்.! நொறுக்குத் தீனியுடன் கவுன்சிலர்களின் குறைகளை கேட்ட நகர்மன்றத் தலைவர்! - tamil news
மயிலாடுதுறைநகராட்சி நகர மன்றத்தின் மாதாந்திர உறுப்பினர் கூட்டம் நேற்று(மே 19) நடைபெற்றது. நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில், 36 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வார்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
அப்போது, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும் பிறப்பு சான்றிதழுக்கு, நகராட்சி பிறப்பு சான்றிதழ் துறை அதிகாரிகள் ரூ.400 லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது என்றும் அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 18-வது வார்டு உறுப்பினர் காந்திமதி கோரிக்கை விடுத்தார்.
அதனை தொடர்ந்து, நகரில் எல்இடி(LED) லைட் வசதி செய்வதற்கும், குடிநீரில் பாதாளசாக்கடை நீர் கலப்பதை தடுக்க, குடிநீர் குழாய் பைப்பை மாற்றவும் நிதி ஆதாரம் இல்லை என்று கூறும் நகராட்சிக்கு, 5 குளிரூட்டி (ஏசி) வாங்க மட்டும் நிதி உள்ளதா? என்றும், 5 குளிரூட்டிக்கு 10 லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது, 5 குளிரூட்டிக்கு 10 லட்ச ரூபாயா? என்றும் மாமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
மக்கள் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து தர மட்டும் பணம் இல்லை என்று கூறுவதாக வார்டு உறுப்பினர்கள் ராமச்சந்திரன் மற்றும் செந்தில் கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து, 22-வது வார்டு உறுப்பினரான உஷா ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் சொல்லும் குறைகளை கேட்க மட்டும் நகராட்சி அதிகாரிகள் கூட்டத்திற்கு வருவதில்லை ஏன்? என்று கேள்வி எழுப்பி பதில் சொல்லுங்கள் என்று நகரமன்ற தலைவரிடம் கேட்டபோது, அதனை காதில் வாங்காமல் நகராட்சி தலைவர் அலட்சியமாக நொறுக்குத்தீனி தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:108 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு சிறப்பு நிகும்பலா யாகம்.. அமாவாசை சிறப்பு வழிபாடு!