அனல் பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு: 2 சுற்றுகளில் 213 காளைகள், 100 காளையர்கள் களம் கண்டனர் - அமைச்சர் மூர்த்தி
Published : Jan 16, 2024, 10:50 AM IST
மதுரை: தைத்திருநாளான பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றவை. அந்த போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும். முதல் நாளான நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரையை சேர்ந்த கார்த்திக் என்பவர் முதல் பரிசான காரைத் தட்டிச் சென்றார். இந்நிலையில், உலக புகழ்பெற்ற பாலாமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.16) மிகவும் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆயிரம் காளைகள் மற்றும் 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை அதிகபட்சம் 8 சுற்றுகளாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இரண்டு சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வாடிவாசலில் இருந்து சீறிய காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களுக்கு ஆட்டம் காட்டி வென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு அண்டா, சைக்கிள், தங்க நாணயம் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் இரண்டு சுற்றுகள் முடிவில், 2 போட்டியாளர்கள், 3 மாட்டின் உரிமையாளர்கள், 2 பார்வையாளர்கள், காவல்துறை சார்பு ஆய்வாளர் ஒருவர் என மொத்தம் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.