12 மாட்டு வண்டியில் சீர்.. மருமகளை திக்கு முக்காட வைத்த தாய்மாமன்!
திண்டுக்கல் மாவட்டம் முருக பவனத்தைச் சேர்ந்தவர், ஜெயபால். இவர் டீக்கடை தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் 2வது மகள் ரம்யாவுக்கு, இன்று அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில், ஜெயபால் மனைவியின் உடன் பிறந்த சகோதரர்களும், பூப்பெய்த பெண்ணின் தாய்மாமன்மார்களும் பழனி ரோட்டில் உள்ள லாரி செட் அருகில் இருந்து தாய்மாமன் சீர் கொண்டு வந்தனர். அதிலும், தமிழர்களின் பாரம்பரியம் மாறாது 12 மாட்டு வண்டிகளில் சீர் கொண்டு வந்தனர்.
முக்கியமாக தாய்மாமன்மார்களின் சீர்வரிசையில் தாம்பூலத் தட்டில் கருப்பட்டி, பழங்கள், பூக்கள், பட்டு புடவைகள், பல வண்ணங்களினாலான சுவை உடைய இனிப்பு வகைகள், பலகாரங்கள், பித்தளை பாத்திரங்கள், ஆடுகள் மற்றும் வாழைத்தார்கள் உள்ளிட்ட பொருள்கள் சீராக நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், வாணவேடிக்கை உடனும், மேள தாளத்துடனும் வந்த தாய்மாமனின் சீர்வரிசையை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.