தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆருத்ரா தரிசனம்: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்!
Published : Dec 27, 2023, 11:29 AM IST
தஞ்சாவூர்:தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீ பெருவுடையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்று விளங்கும் கோயிலாகும். இக்கோயில் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கோயிலாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாகவும் விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தும், பெரிய கோயிலின் கட்டடக் கலையை பார்த்து வியந்தும் வருகின்றனர்.
இக்கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று ஆண்டு தோறும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடந்து வருகிறது. அதோ போல் இந்தாண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று (டிச.26) இரவு தஞ்சை பெரியகோயிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு வில்வ இலை, விபூதி, திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு பொடி, பழங்கள், தேன், கரும்புச்சாறு, பால், தயிர், மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. முன்னதாக நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி வீதி உலா நடைபெற்று சுவாமி கோவிலுக்கு வந்தடைந்து பின்னர் அபிஷேகம் நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.