தேசிய அளவிலான செஸ் போட்டி: 4 பிரிவுகளில் தமிழக அணி தங்கம் வென்று அசத்தல்!
Published : Dec 31, 2023, 8:13 AM IST
வேலூர்:தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 67வது தேசிய அளவிலான செஸ் போட்டி ,வேலூர் மாவட்டம்,அரியூர் நாராயணி தங்க கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் நாடு முழுவதும் உள்ள 32 மாநிலங்களைச் சேர்ந்த 900 மாணவ, மாணவிகள் இந்த சதுரங்க போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்கள். இதில் 14,17,19 ஆகிய வயது பிரிவுகளின் கீழ் மாணவ,மாணவிகளுக்கு தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டது.
ஐந்து நாட்கள் நடந்த இந்த போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஆண்கள் தங்கப் பதக்கத்தை வென்றனர். பெண்கள் பிரிவில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தங்கப் பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
இதனையடுத்து ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களில் பிடித்த மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பதக்கங்களையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார். இந்த விழாவில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, போட்டி ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ள தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு ஊக்கத்தொகையாக தலா 2 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு 1.50 லட்சமும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.