''உன்னத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்''.. வேலூரில் கோடை மழை - Vellore rain video
தமிழ்நாட்டில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில், வேலூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கும் வெயில், ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 112 டிகிரி அளவுக்கு வேலூரில் வெயில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து நடப்பு ஆண்டில், வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதமே அதிகரிக்கத் தொடங்கியது. அதிலும், வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் முறையாக மார்ச் 27ஆம் தேதி வெப்பத்தின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து, 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாகப் பதிவானது.
இதனையடுத்து, கடந்த 14ஆம் தேதி 104.2 டிகிரியாக உயர்ந்த வெயில், நேற்று (ஏப்ரல் 20) 104.7 டிகிரியாக பதிவாகி இருந்தது. இந்த நிலையில், வழக்கம்போல் இன்று (ஏப்ரல் 21) காலை 10 மணி முதலே வெயிலின் அளவு அதிகரித்து வந்த நிலையில், மதியம் 1 மணியளவில் வெயில் உச்சத்தைத் தொட்டது.
தொடர்ந்து, மாலை 3.45 மணியளவில் வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டு, திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, சுமார் 20 நிமிடங்கள் பெய்த கனமழையால் குளிர்ந்த சூழல் ஏற்பட்டது. இதனால், கடந்த சில வாரங்களாக வெயிலால் அவதிக்குள்ளாகி வந்த வேலூர் மாவட்ட மக்களுக்கு, இந்த மழை சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.