நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் திடீர் தீ
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், திருநெல்வேலி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை , ராமையன்பட்டி பகுதியில் சுமார் 150 ஏக்கரில் அமைந்து உள்ளது. இதில் 32.5 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு மாநகராட்சியில் இருந்து தினசரி 110 டன் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று (ஜூலை 20ஆம் தேதி) இரவு சுமார் 8 மணி அளவில் திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது. காற்றின் வேகம் அதிகமானதால் தீ மளமளவென பரவியது. இதனால் சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தீ குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் பற்றி எரியும் தீயை, நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். வருடா வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் இது போல் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கில் தீ வைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், குப்பை கிடங்கை சுற்றியுள்ள சுமார் 5 கிராம மக்கள் புகை மூட்டத்தால் மூச்சுவிட சிரமப்பட்டது குறிப்பிடத்தக்கது.