10-ம் வகுப்பு படிக்கும் போது ஏன் என்னை அடித்தாய்? 19 வயதில் ஆசிரியரை தாக்கி பழிவாங்கிய முன்னாள் மாணவன்
பெரம்பலூர்: திருச்சி காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன். இவருக்கு வயது 41. இவர் பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வாஞ்சிநாதன் ஊருக்குச் செல்வதற்காக பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே சினிமா தியேட்டர் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர் வந்து தன்னை 10-ம் வகுப்பு படிக்கும்போது ஏன் தண்டித்தாய் என சாலையில் அவரைத் தாக்கியுள்ளார். இது தொடர்பாக ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் விசாரணை செய்த போலீஸார் ஆசிரியரை தாக்கியது சங்குபேட்டையைச் சேர்ந்த பாண்டியனின் மகன் ஜேம்ஸ் பாண்டி என தெரியவந்துள்ளது.
விசாரணையில் ஜேம்ஸ் பாண்டிக்கு வயது 19 என்பதும், அவர் 10-ம் வகுப்பு படிக்கும்போது தன்னை அடித்த ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் பல வருடங்கள் கழித்து, அதனை மனதில் வைத்து அவரை கடுமையாகத் தாக்கி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான CCTV காட்சிகள் வெளியானது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில், பெரம்பலூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் பழனி சாமி, வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜேம்ஸ்பாண்டியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
ஜேம்ஸ் பாண்டி தற்போது பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி.கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் அவரது தந்தை பாண்டியன். பெரம்பலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.