பொங்கல் பண்டிகை : தஞ்சை பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்! திராளன பக்தர்கள் சாமி தரிசனம்!
Published : Jan 15, 2024, 2:14 PM IST
தஞ்சாவூர்:தை திங்கள் முதல் நாள் அறுவடை திருநாளாகவும், உழவுக்கு உறுதுணையாக இருந்த சூரிய பகவானுக்கு உழுது விளைவித்ததை படைத்து நன்றி செலுத்தும் விழாவாகவும், தமிழர் திருநாளாக பொங்கல் விழா இன்று (ஜன 15) கொண்டாடப்பட்டு வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாளான இன்று (ஜன.15) உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தஞ்சை பெரியக்கோயில் பெருவுடையாருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு விபூதி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, அரிசி மாவு, இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பொது மக்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். இதே போல் தஞ்சாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலும் சிறப்பு தரிசனம் நடைபெற்றது.