சக்திவேல் கொண்டு சூரனை வதம் செய்த பழனி முருகன்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு..
Published : Nov 18, 2023, 11:05 PM IST
திண்டுக்கல்:முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று (நவ.18) மாலை சிறப்பாக நடைபெற்றது.
அந்த வகையில், பழனி கோயிலில் தரிசனம் செய்ய காலை 11 மணிக்கு நடை அடைக்கபட்டது. அதையடுத்து, மலைகொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மேல் முருக பெருமான் கிரிவீதியில் உள்ள கஜமுகாசூரன், பானுகோபன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகிய சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சூரனை வதம் செய்த இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். மேலும், இந்த நான்கு கிரி வீதியில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழச்சியில், ஐந்நூறுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இதைத் தொடர்ந்து, நாளை (நவ.19) காலை 9.30 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்வானது நடைபெற உள்ளது.