விஜயகாந்த் மறைவையொட்டி தஞ்சாவூரில் கடைகள் அடைக்கப்பட்டு அமைதி ஊர்வலம்..!
Published : Dec 29, 2023, 6:56 PM IST
தஞ்சாவூர்: தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று (டிச.28) காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர், இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காகச் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலிலிருந்து தொடங்கி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வரை நடைபெற்றது. இந்நிலையில் மறைந்த விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில், கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக, பாஜக, அமமுக, இஸ்லாமிய அமைப்பினர் எனப் பல கட்சியினர், வணிக சங்கத்தினர், ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர் சங்கத்தினர் அவரது ரசிகர்கள், பொது மக்கள் என எண்ணற்றோர் அமைதி ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து நாச்சியார் கோவில் கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி இதயப் பூர்வமான அஞ்சலியைச் செலுத்தினர்.