ராணிப்பேட்டை அருகே பொங்கல் சிறப்பு பேருந்து விபத்து; 15 பேர் காயம் - ராணிப்பேட்டை பஸ் விபத்து
Published : Jan 14, 2024, 10:29 AM IST
|Updated : Jan 14, 2024, 12:22 PM IST
ராணிப்பேட்டை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தனியார் மற்றும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்ல அரசால் முடிந்த அளவு போக்குவரத்து வசதிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், பூந்தமல்லியில் இருந்து வேலூருக்கு சிறப்பு பேருந்து என்ற பெயரில் நகர பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. அப்போது இந்த அரசு சிறப்பு பேருந்து, வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பிரேக் பிடிக்காமல் முன்னால் நின்று கொண்டிருந்த மூன்று கார்கள் மீது மோதியுள்ளது. அதுமட்டுமின்றி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்றுவிட்டு கர்நாடக மாநிலம் செல்லும் அரசு பேருந்து மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரசு பேருந்து முன்பக்கம் மற்றும் கார்களும் சேதம் அடைந்தது. மேலும், எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு சுங்கச்சாவடியிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பிரேக் பிடிக்காத பேருந்தை அங்கிருந்தவர்கள் கற்களை வைத்து நிறுத்தியாதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த விபத்து குறித்து வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.