"புதிய கல்விக் கொள்கை என்பது ஆர்எஸ்எஸ் கல்விக்கொள்கை" அண்ணாமலையை விவாதத்திற்கு அழைத்த சீமான்!
ராணிப்பேட்டை:வாலாஜாபேட்டையில் இன்று (பிப்.13) நடந்த நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய கல்விக்கொள்கை என்பது ஆர்ஆர்எஸ் மற்றும் பாஜகவின் கல்விக்கொள்கை என்று கூறினார். இது குறித்து தமிழ்நாடு பாஜக அண்ணாமலை தன்னிடம் விவாதிக்கத் தயாரா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கும், தமிழ்நாட்டில் சிப்காட் அமைப்பதற்கும் நான் இருக்கும் வரையில், அமைக்க முடியாது என்றும் இதற்காக நடக்கும் போராட்டங்களுக்கும் நான் தான் தீர்வு என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் மட்டும்தான் மதத்தை வைத்து அரசியல் செய்யும் கொடுமைகள் நடந்து வருகின்றன என்றார்.
தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் படையெடுப்புகளினால் கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், ஆரம்பத்தில் வெள்ளையர்கள் நாட்டிற்குள் குறைந்த விலையில் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வந்து பின்னர், நம்மை அடிமைப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இதேபோல, குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு வந்த வட மாநிலத்தவர்கள் முதலில் ரூ.500 என்றும் பின்னாளில், ரூ.5000 எனவும் கூறி நமக்கு எதிராகச் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை இன்று வரை ஆண்ட கட்சிகள் மக்களை இலவசத்திற்கு அடிமைப்படுத்தி விட்டது. மக்கள் அரசாங்கம் இலவசமாக ஏதாவது தருமா என்று பார்க்கிறார்கள். மேலும் எதற்கு வேலை செய்ய வேண்டும் என்ற ஒரு மனப்பான்மையில் உள்ளார்கள். இதனால் தான் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குக் குறைந்த கூலிக்கு வந்து வேலை செய்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.